பள்ளிகூட நினைவுகள் என்பது ஒரு சில மனிதர்களையோ, நிகழ்ச்சிகளையோ நினைத்து கொள்வது அல்ல - அது ஒரு காலக்கண்ணாடி!! அந்த கண்ணாடியை என்னை திரும்பி பார்க்க வைத்த என்
நண்பர் / கிராஃபிக்ஸ் மன்னர் சுகுமார் சுவாமிநாதன் னுக்கு என் நன்றிகள்!!
பள்ளிகூட நினைவுகளை பற்றி எழுதசொன்னவுடன்.. எதை எழுதுவது, எதை விடுவதுன்னு தெரியலை. ஆனா ஆறாப்பு (அ) ஆறாம் வகுப்பு (அ) சிக்ஸ்த் ஸ்டேன்டர்ட் வரைக்கும் எழுதுனா போதுமுன்னு சொன்னவுடனேதான், கொஞ்சம் நம்மதியாச்சு. இனி ஸ்டார்ட் மியூஜிக்...
என் பள்ளி
"க்ளுனி" என்ற பள்ளியில்தான் 7 வது வரை படித்தேன்! (தம்பி, பெரிய படிபெல்லாம் படிச்சிருக்கு!!) அந்த ஸ்குலு என் அப்பா வேலை செய்த கம்பெனி, அவர்களின் தொழிலாளர்களுக்காக வைத்து நடத்தியது. (அப்ப காசு? புடுங்குனாங்க... புடுங்குனாங்க...) அது முழுக்க முழுக்க கிருஸ்த்துவ மெட்ரிகுலசன் என்பதாலோ என்னவோ.. பக்கா நீட்டாக கிளாஸ் ரூம், நீட்டாக கார்டன், நீட்டாக பிளே கிரவுன்ட், அப்புறம் முக்கியமா நீட்டான டீச்சர்ர்ர்ர்ர்ஸ்ஸ்ஸ் (உடனே பின்னூட்டதில கிளம்பிடாதிங்க! நீட்டுன்னா? பக்கவாட்டுலையா.. இல்ல, செங்குத்தாகவா? ன்னு. நீட்டுன்னா, சுத்தம்! சுத்தம்!!) அந்த பள்ளியை இப்ப இடிச்சிட்டாலும், அந்த இடத்தை கடக்கும்போது, என் மனக்கண்களில் இப்பொழுதும் என் பள்ளிகூடம் அங்கு இருப்பதுபோலதான் தோன்றும்!!
முதல் நாள் பள்ளியில்
1982 இந்த வருஷம்தான் நான் முதல்முதலாக'ஸ்கூல்'க்கு போறேன்! எல்.கே.ஜி! அதுவரைக்கும் வீட்டில் முதல் பேரன், பையன், செல்லம் என்று இருந்தவனை எங்கம்மா அழகா யூனிபார்ம் போட்டு, டை கட்டிவிட்டு, ஷூ போட்டுவிட்டு அழைச்சிகிட்டு போய், கிளாசில் அமைதியா ஒக்கார வச்சிட்டு போயிட்டாங்க. அங்க பர்த்தா ஒரு 40 பசங்க.. ஒன்னு சிரிக்குது, ஒன்னு மொறைக்குது, ஒன்னு அழுவுது.. எனக்கு என்ன ரியாக்சன் குடுக்குறதுன்னு தெரியாம.. எல்லாரையும் பராக்குப் பாத்துகிட்டு அழுவறதா, சிரிக்கிறதான்னு தெரியாம ஒரு டைப்பா மூஞ்ச வச்சிகிட்டு இருந்தத பாத்துட்டு.. நம்ம "மிஸ்சு", மறுநாள் காலையில் என் அம்மாவிடம் "பையன் தெளிவா இருக்கானா?" ன்னு கேட்டுயிருக்காங்க! (சின்ன வயசுல நடந்தது இதுவரைக்கு ஞாபகம் 'இருக்கா'ன்னு? நீங்க மறக்காம ஞாபகமா கேட்டா... என் பதிலு: "அம்மா சொன்னாங்க")
என் பள்ளி ஆசிரியர்கள்
ஆசிரியர்களை நினைவுகூர்வது நிச்சயம் அவர்களை கவுரவப்படுத்தும் ஒரு செயல்தான்.மாதா பிதா குரு தெய்வம் என்று சும்மாவா சொன்னார்கள்? (பின்ன? காசு கொடுத்தா சொன்னங்கன்னு கேக்காதீங்க!) சிற்சில ஆசிரியர்களை தவிர்த்து விட்டால், ஆசிரியர்கள் அனைவரும் வாழும் தெய்வங்களே! அப்புறம், இல்லியா பின்னே? என்ன மாதிரி வுட்டன் மண்டையிலையே படிப்பை ஏத்தியிருக்காங்கன்னா.. தெய்வம்தானே? அதுவும் 7 வது வரைக்கும் ஒரே மிஸ்சுங்கதான். சந்திரா மிஸ், மேரி மிஸ், மும்தாஜ் மிஸ் என்று சொல்லிகிட்டே போகலாம்.. (சில வயசான பார்டிங்க, மிஸ்சோட போட்டோவ மெயில் அனுப்ப சொல்லி நச்சரிக்கும் என்பதால, அப்பீட்டிகிறேன்!!)
என் பள்ளி நண்பர்கள்
நட்பையும் அதன் உணர்வுகளையும் விளக்க வரிகள் ஏது.. அனுபவிக்க முடியும் இல்லாட்டி நினைச்சு பாக்க முடியும், என் கிளாஸ்ல இருந்த அத்தனை பேரும் என் நண்பர்கள்தான். அதில் சுரேஷ், ஆனந்த், ரஜினி என்பவர்களை குறிப்பிட்டு சொல்லனும்! அதிலும் அந்த சுரேஷ் நல்லா ஜான் சீனா மாதிரி உடம்ப வச்சிருப்பான். நான் எவன்கிட்டயாவது வம்பு வளர்த்துட்டு, ஓடி வந்து அவன் கூட நின்னுப்பேன்! (நல்லவேளை! நான் ஏழாவது படிக்கிற வரைக்கும் கூடஇருந்து காப்பாத்துனான். இல்லன்னா, 'ஆப்'பாத்திருப்பாய்ங்க)
வடலூரிலும், பின்னர் சிதம்பரம், அப்புறம் நெய்வேலி என்று என் பள்ளி வாழ்வில் நான் சம்பாதித்த நண்பர்கள் ஏராளம் ஏராளம். பள்ளியில் படித்த நாட்களில் இவர்களுடனான நட்பு என் வாழ்நாள் வரை நீடிக்குமெனத்தான் நினைத்திருந்தேன். ஆனால் இன்று இவர்களில் பலரின் நட்பு தொலைந்துவிட்டது. (கூகுள்ல்ல தேடுன்னு சொல்லி, நட்பை நைய்யான்டி செய்யாதீங்க!) அந்த நாட்களை நினைத்தால் பெருமூச்சுடன் ஓர் ஏக்கம் தான் மிஞ்சுகிறது. ஆனாலும், அதை நிவர்த்தி செய்வதுபோல் புது நண்பர்கள் நிறைய கிடைத்தார்கள், கிடைத்துகொண்டும் இருக்கிறார்கள்.
"There is no security quite as comfortable and undemanding as the kind you feel among old friends"
பள்ளி நாட்களில் என் தம்பி!
என் பள்ளிநாட்களில் என் நண்பர்களை விட ரொம்ப பிடிச்சது என் தம்பி 'ஆடல்'! என் பெற்றோரின் இரண்டாவது பிள்ளை. ஆனால் எனக்கென்று ஒரே சகோதரன் இந்த ஆடலரசன்!! (கலையரசன் & ஆடலரசன் ஆகா.. என்னா ஒரு ரைமிங்கு!) நாங்கள் இரண்டு பேரும் ஒரே பள்ளியில் படித்ததால், ஒன்றாகவே செல்வோம், திரும்புவோம், படிபோம், விளையாடுவோம், உண்போம், உறங்குவோம். இப்படி பல "வோம்" கள் இருந்ததால, பள்ளி நாட்களில் நண்பர்களை விட என் தம்பிதான் ரெரரராம்ம்பப பிடிக்கும்!
பள்ளி நாட்களில் நாங்கள் ஆடாத ஆட்டமேயில்லை. அப்பொழுதெல்லாம் கம்ப்யூட்டரோ, டி.வியோ ஏன் டிரான்ஸிஸ்டர் கூடக் கிடையாது. விளையாட்டெல்லாம் வீட்டிலும், ரோட்டிலும்தான். அப்பா இருக்கும்போது கேரம்போர்ட், செஸ், டிரேட் ன்னு விளையாடி விட்டு, அவர் அந்த பக்கம் போனவுடன் நாங்க இரண்டு பேரும் இந்த பக்கம் 'எஸ்' ஆகி, தெருவில் உள்ள நண்பர்களுடன் ஆட்டம்தான்.
பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தவுடன் எதாவது பிரச்சனை செய்து சண்டை போட்டுகொள்வோம், சண்டை என்றால்.. தலையனை, சோஃபா, புக்ஸ் ன்னு எல்லாத்தையும் வைச்சி அடிச்சிபோம். எங்கம்மா வந்து "சனியன்களா, வந்த உடனே ஆரம்பிச்சிட்டீங்களா?" என்று ஆளுக்கு ஒன்னு போட்டு ஒழுங்காக இருக்கனுமுன்னு சொல்லிட்டு போவாங்க. பின்னர் கொஞ்சநேரம் ரொம்பவும் அன்பாகப் பழகிவிட்டு, திரும்பவும் அடித்துகொள்ள ஆரம்பிப்போம். நானும் 'அம்மா... தம்பி என்னை அடிக்கிறான்' என்று ஒரே கூச்சல்தான். இப்படி அடித்த தம்பிதான் இப்போது இத்தனை அன்பா? வயதும், வளர்ச்சியும் அவனை எப்படிப் பக்குவப்படுத்தியுள்ளது!!
போதும்.. போதும் நான் விட்டா பேசிகிட்டே அருப்ப.. சே!, இருப்பேன்! அதனால, விடு ஜூட்!!
அடுத்து நான் கொசுவத்தி சுத்த கூப்பிடுற என் அன்பர்கள்...
1. குசும்பன்
2. வினோத் கெளதம்
3. சுந்தர்ராமன்
தோழர்களே! எழுதுனா நல்லது.. இல்லனா, வெள்ளிகிழமை அவங்க, அவங்க ரூமுக்கு வந்துடுவேன்!!
நாடுவிட்டு நாடுவந்த போதும் கூடவே வரும் நினைவுகள்...
நெஞ்சுக்குள் அடிக்கடி வரும் இந்த மலரும் நினைவுகளே,
இன்றைய என் இருப்பின் அஸ்த்திவாரம்!