Wednesday, July 29, 2009

கேர்ள் ஃபிரண்ட் புள்ள.. போன் பண்ணா தொல்ல..

ஏன் தெரியுமா 10 வயசுக்குள்ளாற குழந்தைகள் இருக்குற நண்பர்கள் வீட்டுக்கு போன் பண்ணக்கூடாது? அந்த கொடுமைய சொல்றேன் கேளுங்க..


நான் சமீபத்துல, என் நண்பிக்கு போன் செஞ்சியிருந்தேன். அவங்க பிரசவம் முடிஞ்சி கொஞ்சம் பிஸியாகிட்டதால, 1 வருஷத்துக்கு மேல அவங்ககிட்ட பேச முடியலை. திடீர்னு ஞாபகம் வந்த மாதிரி ஒரு நாள் 'தவரிய அழைப்பு' குடுத்தாங்க! (அப்படியெல்லாம் நெனைக்கப்படாது...மிஸ்டு கால் தமிழாக்கம்தான் அது!). சரின்னு.. நானும் என்னமோ, ஏதோன்னு போனை போட்டங்க...

வழக்கம்போல நலம் விசாரிச்சிட்டு, தெரியாத தானமா ஒன்னு கேட்டுடங்க.. என்னான்னா? அந்த டயலாக் டெலிவரிங்களை நீங்களே கீழ படிங்க தெய்வங்களா..

நானு : அப்புறம்.. உன் பையன் எப்டி இருக்கான்? என்ன, அவனுக்கு ஓன்னரை வயசு இருக்குமா..?
நண்பி : ஆமா.. இப்பெல்லாம் ரொம்ப பேச ஆரம்பிச்சிட்டான் யா! என்கிட்ட இருந்து போனை புடிங்கி பேச ஆரம்பிச்சிட்டான்னா பாத்துகோயேன்..! இரு, அவன்கிட்ட தரேன்!
நானு : ஏய்யய்.. ஒரு நிமிஷ்ஷ்...
(போன் புடுங்கப்படுகிறது. கொஞ்ச நேரம் சத்தத்தையே காணும்..)

நண்பி (தூரத்திலிருந்து): எப்டி மாமா இருக்கீங்கன்னு கேளு!
பையன் : (சத்தமே போடல)
நண்பி (தூரத்திலிருந்து): கேளுடா!
(என் மனசு: "கொய்யால.. கேட்டு தொலடா! இல்லனா.. உடமாட்டா போலருக்கே!")
நண்பி (தூரத்திலிருந்து): கேளு செல்லலோம்.. மாமா எவ்வளவு நேரம் லையன்ல இருக்காரு பாரு!
பையன் : ..கா.. கொள.. க..
நானு : (இப்ப நான் சத்தமே போடல)
நண்பி (தூரத்திலிருந்து): நீ எதாவது திருப்பி சொல்லு கலை!
நானு : டாய் குட்டி.. சாப்டியாபா? (கொஞ்சநேரம் அவனுடைய பாஷையில பேசிட்டு) o.k அம்மாகிட்ட குடு போனை..

(இந்த வசனத்தை சொல்லி 5 நிமிஷம் கழிச்சி நண்பி வந்தாங்க லையனுக்கு)
நண்பி : ஹா.. ஹா..அவனுக்கு உன்னைய புடிச்சிருக்கு போல..
நானு : இதுமாதிரி பேசிகிட்டு இருந்தா சீக்கிரமா வார்தைகளை கத்துபான்!
நண்பி : ஆமா.. ஆமா.. எ.பி.சி.டி எல்லாம் கூட சொல்லுவான்.
(திரும்ப என்னைய கேக்காமலேயே, அந்த பெரிய மனுஷன்கிட்ட போனை கொடுதுடுச்சு)
பையன் : (சத்தமே போடல)
நண்பி : (தூரத்திலிருந்து): எ.பி.சி.டி சொல்லுப்பா!
பையன் : ..கா.. கொள.. க..
நண்பி : (தூரத்திலிருந்து): சூப்பரு.. ஈ.எப்.ஜி.எச் சொல்லுப்பா!
பையன் : ..கா.. கொள.. க..
நண்பி (தூரத்திலிருந்து): வெரி குட்!!

அப்பாடா நல்வேளை.. இசட் வரைக்கும் போகாம ஒரு வழியா போனை வாங்கி, அவங்க வீட்டுகாரருக்கு வேலை விஷயமா கேக்க ஆரம்பிச்சி, நான் அடுத்த வாரம் இன்ஃபாரம் பண்றேன்னு சொல்லிட்டு போனை வைச்சிட்டேன்.

ஒரு பத்து நாள் கழித்து, அவளுடைய வீட்டுகாரர் வேலை சம்பந்தமான சர்ட்டிபிகேட் அட்டஷ்டேசன் குறித்து போன் பண்ணலாமுன்னு நினைச்சேன். அய்யோ.. உடனே அந்த நினைப்பை எச்சி தொட்டு அழிச்சிட்டு, chat பண்ணா தப்பிசி்டலாமுன்னு அறிவா(?) கணக்கு போட்டு, சாட்ங்குல அவளை பிடித்தேன்.

நானு : Hai
நண்பி : Hang on, my son is all over the laptop
நானு : ok
நண்பி : He wants to say something to you
நண்பி : .z..,zxcnv..a.,x

இப்ப நான் என்ன செய்ய்ய்யயய?

Thursday, July 23, 2009

என் ஃபிளாகில் எனக்கு பிடிக்காத- 101. ஒரு பயலுவலும் படிக்க மாட்றாங்க..

நானும் தலையை பிச்சிகிட்டு, ஏதேதோ ஆராய்ச்சி பண்ணி, உருட்டி பெறட்டி, முக்கி மொனரி, பிச்சி பிராஞ்சி, மக்கி மண்னாகி எதாவது எழுதும்போது ஒருத்தரும் வரலையின்னா... யாருமே இல்லாத கடைக்கு யாருக்குங்க டீயாத்தனும்? ("இதுல வர்ர ஆளுங்க மட்டும் அப்படியேயய படிச்சிடுறாங்களா?" ன்னு நீங்க கொலம்பஸ் ஆகிடாதிங்க!)

2. பத்து பைசாவுக்கு புண்ணியம் இல்ல..

பாதிநேரம் வேலைய செய்யறமோ இல்லியோ, பதிவ எப்படி போட்டு ஹிட்ஸ் வாங்குறதுன்னு யோசிச்சே பசி பயங்கரமா எடுக்குது. விளம்பரம் வச்சா காசு பாக்கலாமுன்னு பல பேரு கூவுனாலும், வச்சா மட்டும் அதுமேல களிக் பன்னிட்டுதான் மறுவேலை பாப்பாங்க நம்ம மக்களு! இதுல தனியா வேற சொல்லனுமா, இந்த பிளேக்குனால ஒட்ட காலணா கூட கிடைக்காதுன்னு..

3. கூகிளான்டவர் பக்கத்துல முதல்ல வர்லயே...

நானும் மாஞ்சி மாஞ்சி இடுகை இட்டாலும், கூகிள்ல முதல் பக்கத்துல காமிக்க மாட்டுதுங்க (நாட்டுக்கு ரெரரராம்ம்பபப முக்கியம்). அப்படி காமிக்கலனா என்ன மாதிரி நல்லவ.. (மூட்ரா..!) எப்படிங்க மக்கள் கவனிப்பாங்க?

4. கடைய தொறந்து வச்சிகிட்டு தேவுடு காக்கறது...

சத்தியமா.. கமெண்ட் பாக்ஸ் வச்சிருக்கங்க நானு! அதுல டெஸ்ட் செஞ்சும் பாத்துடேன்.. நல்லா வேலையும் செய்யுது. ஆனா ஆளுங்கதான் வர மாட்றாங்களா? இல்ல.. வந்து படிச்சுட்டு, இந்த மொன்னைக்கு எதுக்கு பின்னூட்டம் போட்டு நேரத்தை வீணாக்கிகிட்டுன்னு நினைச்சு ஓடி போயிடுறாங்களான்னு பிரியல மக்கா!!


5. பழைய டெம்பிளேட்டையே இன்னமும் வச்சிகிட்டு அழுவறது..

அவங்கவங்க புத்தம் புதுசா, கண்ணுக்கு குளிர்ச்சியா, பாக்குறத்துக்கு ஆசையா, ஓசியில குடுக்கற டெம்பிளேட்டை.. டெம்டே இல்லாம மாத்திட்டாங்க! நா மட்டும் "கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு"ன்னு பழைய டெம்பிளேட்டை பவுசே குறையாம பத்திரமா வச்சிருக்கேன்! (மாத்துறத்துக்கு டைம் இல்லன்னு 'டீசான்டா'(!) சொல்லியிருக்கலாமோ?)

6. பதிவு போடுறதுக்கு மேட்டர் இல்லாம முக்குறது..

ஆயிரம்தான் நா வாய் கிழிய பேசினாலும், எழுதசொன்னா நான் கொஞ்சம் ஆவணிதான் போயிடுவேன்! இருந்தாலும் ஆசை யாரை உட்டுது?. இதுதான் எழுதனுமுன்னு இல்லாம, எதையாவது ஆபீஸ் டேபிளுக்கு அடியில உக்காந்து யோசிச்சு எழுதிடுவேன் ங்கறது வேற விசயம்! (மச்சி.. நீ எழுதேன்! நீ எழுதேன்!! என்ற ரேஞ்சிக்கு போகாம இருந்தா சரி..)

7. நான் எழுத நினைகிறத எழுதாம, ஏதேதோ கிறுகுறது..

நாம எழுதற தகவல்கள் யாருக்காவது உபயோகமா இருக்கனுன்னு நினைச்சுட்டு எழுத ஆரம்பிச்சேன். ஆனா, அது முடியாம.. நான் கிறுக்கியது எல்லாம் மொத்தமா மொக்கயாக்கியது! (என்னுடைய நேர்மை உங்களுக்கு பிடிச்சிருக்குமே?)

8. அருமையா எழுதும் பதிவர்களுக்கு லிங்கு கொடுக்காதது..

என்னைவிட (நீயெல்லாம் ஒரு ஆளு?) அருமையா, அட்டகாசமா, அறிவா, அழகா, அம்சமா (போதும்.. போதும்.) எழுதுற சக மற்றும் மூத்த பதிவர்களோட "லிங்"கை இன்னமும் என்னுடைய வலைப்பூவில் இனைக்காம, சோம்பேறி சொம்பா திரியிறது.

9. அட்சென்சை சேர்த்தும் அதை காமிக்காதது..

ரொம்ப கஷ்டப்பட்டு சேர்த்த அட்சென்சை, ஒவ்வொரு இடுகைக்கு கீழே காண்பிக்குமுன்னு பார்த்தா... அது 'பாப்பரபபபான்னு' பல்ல இளிச்சிகிட்டு நிக்குறது! வர்ற ஆளுங்க எல்லாம் ஏதோ சூனியம் வச்ச ஃபளாக்கு போலன்னு தலைதெறிக்க ஓடுறாங்க பாஸ்!!

10. என் நேரத்தை முழுங்கி.. என்னை, அதுக்கு அடிமையாக்கியது..

(10வது பாயிண்ட், "எனக்கு நானே சுண்ணாம்பு" திட்டத்தில் இணைத்துகொண்டது!)

Tuesday, July 21, 2009

அமீரக அஜீத்தை வாழ்த்த வாங்க..பூமியில்
பிறந்த ஆயிரம் ஆயிரம் கலைஞர்கள் வரிசையில் கலைகளின் விளை நிலமாம் பரங்கிபேட்டையில் 22-07-1981 ல் பிறந்து, பாண்டிசேரியில் படித்து வளர்ந்து, பணிக்காக அமீரகம் வந்து இன்று நம்மோடு நட்புறவு கொண்டு வாழ்ந்துவரும் "அல் அயின் கைபுள்ள" என்று சக மற்றும் பிரபல பதிவர்களால் அழைக்கப்படும் நம் நண்பன் வினோத் கெளதம் தனது இருபத்தி ஒன்பதாம் பிறந்த நாளுக்குள் பிரவேசிக்கின்றார்.இந்த
இனிய பதிவர் மனிதவாழ்வின் நூறு ஆண்டுகளையும் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்து தனது படைப்புகள் மூலமாக மக்களை மகிழ்வித்து தானும் மகிழ்வோட வாழ எல்லோருக்கும் பொதுவான இறைவ‌ன் அருள் புரியட்டும் என வேண்டி இந்த இனிய நண்பரை வாழ்த்துவோம்.

உன் பிறந்தநாளன்று மட்டும்,
என் இடுகை வெறுமையாய் இருப்பது பார்த்து கோபிக்கிறாய்.
அது இடுகையில் குறிக்க வேண்டிய நாளில்லையடா..
கல்வெட்டில் பொறிக்க வேண்டிய நாள்!

Monday, July 20, 2009

பத்தரமா வச்சிகோங்க! தொலசிபுடாதிங்க!!

[Inter_award.jpg]

செந்தழல் ரவி ஆரம்பித்த விருது வழங்குதல் மெகா தொடர், அங்க இங்க சுத்தி, ஸ்க்ரூ டிரைவர், கடப்பாரை அடிச்சு நம்ம தளத்திற்கும் (?) விருது வந்து சேர்ந்துடுச்சு! அதை கொடுத்த தோழர் கீத் குமாரசாமிக்கு நன்றி!!

இன்னும் கொஞ்ச நாள்ல இந்த விருது இல்லாத தளமே நல்ல தளம், என்கிற ரேஞ்சிக்கு இந்தவிருது அனைனனவருருருருக்குகும் அளிக்கப்பட்டு வருகிறது. இத பார்க்கும்போது ஃபீல் ஆகி, மானாவரிய கண்ணீர் கழலுதுங்கோ!!

இந்த விருது கிடைச்சு 1 வாரமா ஆகிடுச்சு.. ஆணி புடுங்குற வேலை அதிகமானதால பங்கு பிரிக்கமுடியல.(திட்டாதிங்கப்பா.. எல்லாரும் சொல்றாங்ளேன்னு ஒரு ஃபுலோவுல சொல்லிட்டேன்!) இப்படியே போனா நான் விருது கொடுக்க ஆள் கூகுள்ல தேடினாலும் கிடைக்க மாட்டாங்கன்னு உண்மையை புரிஞ்சு(!) இடுகையை இட்டுடோமுல்ல!!

இந்தவிருதை ஆறு பேருக்கு பகிர்ந்து கொடுக்கனுமுன்னு ரவியார், நின்னுகிட்டே யோசிச்சி ரூல்ஸ் போட்டதால, நான் நிமிந்து படுத்து யோசிச்சு ஆறுபேருக்கு குகுடுடுகிகிறேறேன்ன் (பயம்தான்! வாங்குறவங்க என்ன சொல்லபோறாங்கலோ?). பாராட்டனுமுன்னா என்ன பாராட்டுங்க.. திட்டனுமுன்னா வழக்கம்போல் ரவியை திட்டிடுங்க!

ஓ.கே. எல்லாரும் ஜோரா ஒருகா கை தட்டுங்க...

1. ஆசிப் மீரான் அதிரடி அண்ணாச்சி - பதிவுலக ரஜினிக்கு அறிமுகம் வேனுமா?

2. குசும்பன் - குசும்பு + குறும்பான நகைச்சுவை எழுத்துக்களுக்கு சொந்தகாரர். அவரை அறிமுகப்படுத்தி எழுத தேவையில்லை என்றாலும், எழுதுலனா.. 'சங்கு'தான்டி ன்னு சொன்னதுனால எழுதுறேன்!. சுருக்கமா, சுருக்கமில்லாம சொன்னா... பாஸ்தான் பதிவுலக நகைச்சுவைக்கு H.O.D. (o.k வா பாஸ்?)

3. ஜோ - ஜப்பான் ஜோன்னு நாங்க செல்லமா கூப்பிடுற நண்பன். அவரு குரு கவுண்டமணி மாதிரி ரவுண்டு கட்டி கலாய்கிற ஆளு. காக்டெய்ல் மேக்கிங், அனுபவம், நகைச்சுவை, கவிதை, கதைன்னு பூந்து விளையாடுவாரு. அதைவிட அவரிடம் கவர்ந்தது, புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு அவராற்றும் தன்னார்வத் தொண்டு. நான் சொல்வதைவிட அவர் வலைப்பூவை ஒருமுறை படித்தால் உங்களுக்கும் அவரை பிடிக்கும்!

4. சுகுமார் சுவாமிநாதன் - வலைமனை என்ற தளம் வைத்து கிராஃபிக்சில் கலக்குபவர். நகைச்சுவையான போட்டோ கமெண்ட்ஸ் போட்டு எல்லோரையும் சிரிக்க வைப்பவர். உலககோப்பை, ஐ.பி.எல் 20/20, எலக்க்ஷன் என்று எல்லாவற்றையும் கலாய்ப்பவர்.

5. சுந்தர்ராமன் - இவர்தாங்க.. "வடைஎழு வள்ளல்" என்று அமீரக பதிவர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்போல் தோற்றம் இருந்தாலும், அழியாத நினைவுகள் பற்றி அருமையாக எழுதுகிற ஒரு அமைதியான பதிவர் இவர். இவரிடமிருந்து நிறைய இடுகைகளை எதிர்பார்கிறேன்!!

6. நாகா - எழுத வந்து சில நாட்களே ஆனாலும்.. அவருடைய பதிவுகளில் தமிழ்வீரியமும், வார்த்தை பிரையோகமும் நீண்ட நாள் எழுதும் பதிவர் கூட ஆச்சரியபடும்படி எழுதுகிறார். இளமை மற்றும் நகைச்சுவை இழையோடும் இடுகையினாலே வந்த கொஞ்ச நாட்களிலேயே, பல பதிவர்களை திரும்பி பார்க்க வைத்தவர்.

ஸ்ஸ்... அப்பாடா!, ஒரு வழியா கடமையை முடிச்சிடேன்!!

Monday, July 6, 2009

காலயந்திரம் / கொசுவத்தி /ஃபிளாஷ் பேக் (பள்ளிகூட நினைவுகள்)


பள்ளிகூட நினைவுகள் என்பது ஒரு சில மனிதர்களையோ, நிகழ்ச்சிகளையோ நினைத்து கொள்வது அல்ல - அது ஒரு காலக்கண்ணாடி!! அந்த கண்ணாடியை என்னை திரும்பி பார்க்க வைத்த என் நண்பர் / கிராஃபிக்ஸ் மன்னர் சுகுமார் சுவாமிநாதன் னுக்கு என் நன்றிகள்!!

பள்ளிகூட நினைவுகளை பற்றி எழுதசொன்னவுடன்.. எதை எழுதுவது, எதை விடுவதுன்னு தெரியலை. ஆனா ஆறாப்பு (அ) ஆறாம் வகுப்பு (அ) சிக்ஸ்த் ஸ்டேன்டர்ட் வரைக்கும் எழுதுனா போதுமுன்னு சொன்னவுடனேதான், கொஞ்சம் நம்மதியாச்சு. இனி ஸ்டார்ட் மியூஜிக்...

என் பள்ளி

"க்ளுனி" என்ற பள்ளியில்தான் 7 வது வரை படித்தேன்! (தம்பி, பெரிய படிபெல்லாம் படிச்சிருக்கு!!) அந்த ஸ்குலு என் அப்பா வேலை செய்த கம்பெனி, அவர்களின் தொழிலாளர்களுக்காக வைத்து நடத்தியது. (அப்ப காசு? புடுங்குனாங்க... புடுங்குனாங்க...) அது முழுக்க முழுக்க கிருஸ்த்துவ மெட்ரிகுலசன் என்பதாலோ என்னவோ.. பக்கா நீட்டாக கிளாஸ் ரூம், நீட்டாக கார்டன், நீட்டாக பிளே கிரவுன்ட், அப்புறம் முக்கியமா நீட்டான டீச்சர்ர்ர்ர்ர்ஸ்ஸ்ஸ் (உடனே பின்னூட்டதில கிளம்பிடாதிங்க! நீட்டுன்னா? பக்கவாட்டுலையா.. இல்ல, செங்குத்தாகவா? ன்னு. நீட்டுன்னா, சுத்தம்! சுத்தம்!!) அந்த பள்ளியை இப்ப இடிச்சிட்டாலும், அந்த இடத்தை கடக்கும்போது, என் மனக்கண்களில் இப்பொழுதும் என் பள்ளிகூடம் அங்கு இருப்பதுபோலதான் தோன்றும்!!

[school.jpg]

முதல் நாள் பள்ளியில்

1982 இந்த வருஷம்தான் நான் முதல்முதலாக'ஸ்கூல்'க்கு போறேன்! எல்.கே.ஜி! அதுவரைக்கும் வீட்டில் முதல் பேரன், பையன், செல்லம் என்று இருந்தவனை எங்கம்மா அழகா யூனிபார்ம் போட்டு, டை கட்டிவிட்டு, ஷூ போட்டுவிட்டு அழைச்சிகிட்டு போய், கிளாசில் அமைதியா ஒக்கார வச்சிட்டு போயிட்டாங்க. அங்க பர்த்தா ஒரு 40 பசங்க.. ஒன்னு சிரிக்குது, ஒன்னு மொறைக்குது, ஒன்னு அழுவுது.. எனக்கு என்ன ரியாக்சன் குடுக்குறதுன்னு தெரியாம.. எல்லாரையும் பராக்குப் பாத்துகிட்டு அழுவறதா, சிரிக்கிறதான்னு தெரியாம ஒரு டைப்பா மூஞ்ச வச்சிகிட்டு இருந்தத பாத்துட்டு.. நம்ம "மிஸ்சு", மறுநாள் காலையில் என் அம்மாவிடம் "பையன் தெளிவா இருக்கானா?" ன்னு கேட்டுயிருக்காங்க! (சின்ன வயசுல நடந்தது இதுவரைக்கு ஞாபகம் 'இருக்கா'ன்னு? நீங்க மறக்காம ஞாபகமா கேட்டா... என் பதிலு: "அம்மா சொன்னாங்க")

என் பள்ளி ஆசிரியர்கள்

ஆசிரியர்களை நினைவுகூர்வது நிச்சயம் அவர்களை கவுரவப்படுத்தும் ஒரு செயல்தான்.மாதா பிதா குரு தெய்வம் என்று சும்மாவா சொன்னார்கள்? (பின்ன? காசு கொடுத்தா சொன்னங்கன்னு கேக்காதீங்க!) சிற்சில ஆசிரியர்களை தவிர்த்து விட்டால், ஆசிரியர்கள் அனைவரும் வாழும் தெய்வங்களே! அப்புறம், இல்லியா பின்னே? என்ன மாதிரி வுட்டன் மண்டையிலையே படிப்பை ஏத்தியிருக்காங்கன்னா.. தெய்வம்தானே? அதுவும் 7 வது வரைக்கும் ஒரே மிஸ்சுங்கதான். சந்திரா மிஸ், மேரி மிஸ், மும்தாஜ் மிஸ் என்று சொல்லிகிட்டே போகலாம்.. (சில வயசான பார்டிங்க, மிஸ்சோட போட்டோவ மெயில் அனுப்ப சொல்லி நச்சரிக்கும் என்பதால, அப்பீட்டிகிறேன்!!)


என் பள்ளி நண்பர்கள்
நட்பையும் அதன் உணர்வுகளையும் விளக்க வரிகள் ஏது.. அனுபவிக்க முடியும் இல்லாட்டி நினைச்சு பாக்க முடியும், என் கிளாஸ்ல இருந்த அத்தனை பேரும் என் நண்பர்கள்தான். அதில் சுரேஷ், ஆனந்த், ரஜினி என்பவர்களை குறிப்பிட்டு சொல்லனும்! அதிலும் அந்த சுரேஷ் நல்லா ஜான் சீனா மாதிரி உடம்ப வச்சிருப்பான். நான் எவன்கிட்டயாவது வம்பு வளர்த்துட்டு, ஓடி வந்து அவன் கூட நின்னுப்பேன்! (நல்லவேளை! நான் ஏழாவது படிக்கிற வரைக்கும் கூடஇருந்து காப்பாத்துனான். இல்லன்னா, 'ஆப்'பாத்திருப்பாய்ங்க)

வடலூரிலும், பின்னர் சிதம்பரம், அப்புறம் நெய்வேலி என்று என் பள்ளி வாழ்வில் நான் சம்பாதித்த நண்பர்கள் ஏராளம் ஏராளம். பள்ளியில் படித்த நாட்களில் இவர்களுடனான நட்பு என் வாழ்நாள் வரை நீடிக்குமெனத்தான் நினைத்திருந்தேன். ஆனால் இன்று இவர்களில் பலரின் நட்பு தொலைந்துவிட்டது. (கூகுள்ல்ல தேடுன்னு சொல்லி, நட்பை நைய்யான்டி செய்யாதீங்க!) அந்த நாட்களை நினைத்தால் பெருமூச்சுடன் ஓர் ஏக்கம் தான் மிஞ்சுகிறது. ஆனாலும், அதை நிவர்த்தி செய்வதுபோல் புது நண்பர்கள் நிறைய கிடைத்தார்கள், கிடைத்துகொண்டும் இருக்கிறார்கள்.

"There is no security quite as comfortable and undemanding as the kind you feel among old friends"

join

பள்ளி நாட்களில் என் தம்பி!

என் பள்ளிநாட்களில் என் நண்பர்களை விட ரொம்ப பிடிச்சது என் தம்பி 'ஆடல்'! என் பெற்றோரின் இரண்டாவது பிள்ளை. ஆனால் எனக்கென்று ஒரே சகோதரன் இந்த ஆடலரசன்!! (கலையரசன் & ஆடலரசன் ஆகா.. என்னா ஒரு ரைமிங்கு!) நாங்கள் இரண்டு பேரும் ஒரே பள்ளியில் படித்ததால், ஒன்றாகவே செல்வோம், திரும்புவோம், படிபோம், விளையாடுவோம், உண்போம், உறங்குவோம். இப்படி பல "வோம்" கள் இருந்ததால, பள்ளி நாட்களில் நண்பர்களை விட என் தம்பிதான் ரெரரராம்ம்பப பிடிக்கும்!

பள்ளி நாட்களில் நாங்கள் ஆடாத ஆட்டமேயில்லை. அப்பொழுதெல்லாம் கம்ப்யூட்டரோ, டி.வியோ ஏன் டிரான்ஸிஸ்டர் கூடக் கிடையாது. விளையாட்டெல்லாம் வீட்டிலும், ரோட்டிலும்தான். அப்பா இருக்கும்போது கேரம்போர்ட், செஸ், டிரேட் ன்னு விளையாடி விட்டு, அவர் அந்த பக்கம் போனவுடன் நாங்க இரண்டு பேரும் இந்த பக்கம் 'எஸ்' ஆகி, தெருவில் உள்ள நண்பர்களுடன் ஆட்டம்தான்.


பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தவுடன் எதாவது பிரச்சனை செய்து சண்டை போட்டுகொள்வோம், சண்டை என்றால்.. தலையனை, சோஃபா, புக்ஸ் ன்னு எல்லாத்தையும் வைச்சி அடிச்சிபோம். எங்கம்மா வந்து "சனியன்களா, வந்த உடனே ஆரம்பிச்சிட்டீங்களா?" என்று ஆளுக்கு ஒன்னு போட்டு ஒழுங்காக இருக்கனுமுன்னு சொல்லிட்டு போவாங்க. பின்னர் கொஞ்சநேரம் ரொம்பவும் அன்பாகப் பழகிவிட்டு, திரும்பவும் அடித்துகொள்ள ஆரம்பிப்போம். நானும் 'அம்மா... தம்பி என்னை அடிக்கிறான்' என்று ஒரே கூச்சல்தான். இப்படி அடித்த தம்பிதான் இப்போது இத்தனை அன்பா? வயதும், வளர்ச்சியும் அவனை எப்படிப் பக்குவப்படுத்தியுள்ளது!!

போதும்.. போதும் நான் விட்டா பேசிகிட்டே அருப்ப.. சே!, இருப்பேன்! அதனால, விடு ஜூட்!!

அடுத்து நான் கொசுவத்தி சுத்த கூப்பிடுற என் அன்பர்கள்...

1. குசும்பன்

2. வினோத் கெளதம்

3. சுந்தர்ராமன்

தோழர்களே! எழுதுனா நல்லது.. இல்லனா, வெள்ளிகிழமை அவங்க, அவங்க ரூமுக்கு வந்துடுவேன்!!

நாடுவிட்டு நாடுவந்த போதும் கூடவே வரும் நினைவுகள்...
நெஞ்சுக்குள் அடிக்கடி வரும் இந்த மலரும் நினைவுகளே,
இன்றைய என் இருப்பின் அஸ்த்திவாரம்!

Blog Widget by LinkWithin